வேளாங்கண்ணி அருகே பி.ஆர்.புரத்தில் கஞ்சா பதுக்கி வைத்தவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார்
வேளாங்கண்ணி அருகே பி.ஆர்.புரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகப்பட்டினம் தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பி.ஆர்.புரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி அதிலிருந்த நான்கு பேரை விசாரித்தனர். இதில் பிடிபட்ட நால்வரும் வேதாரண்யம் புஷ்பவனம் அழகர் கவுண்டர் தெருவைச் சேர்ந்த ரகுபாலன் (42), தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து(43), சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகோச்சபட்டியை சேர்ந்தராஜ்குமார்(28), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த விமல்ராஜ்(24) என்பது தெரியவந்தது. இவர்கள் இரண்டு கார்களில் கஞ்சா கடத்தியதும், கஞ்சாவை இலங்கையைச் சேர்ந்த சதீஸ் என்பவரிடம் பெற்றதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட நான்கு பேர் அளித்த தகவலின் பேரில் பி.ஆர்.புரத்தில் மகாலிங்கம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ கஞ்சாவை, கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நான்கு பேரையும் கீழையூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்திய இரண்டு கார்கள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.