ஜனவரி 6 ந்தேதிக்குள் முதல்வர் பணி நிரந்தரம் அறிவித்தால் பாராட்டுவோம்:
ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் சேர்ந்து போராடுவோம்:
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் அறிக்கை :
2021 தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி முடியும் நேரத்திலும் நிறைவேற்றாமல் காலத்தை கடத்துவது ஒருபோதும் பெருமை சேர்க்காது.
2021தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதியே நிறைவேற்றாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த 2026 தேர்தலுக்கு வாக்குறுதி தயாரிக்க குழுவை அமைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.
15 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி புரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் தற்போதைய ரூபாய் 12,500 சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள்.
மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் போன்றவற்றை ஒருபோதும் அரசு வழங்கவில்லை.
இதனால், 12 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி நிர்ணயித்து காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்கும்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்.
ஜனவரி 6 ந்தேதிகுள் முதல்வர் அறிவிக்க உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் அறிவிப்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என அறிவித்தால் பாராட்டுவோம்.
ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் சேர்ந்து போராடுவோம்.
பணி நிரந்தரதிற்காக போராடுகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களின் கண்ணீருக்கு நீதியை முதல்வரின் திராவிட மாடல் அரசு சமூக நீதி அரசு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.