நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நம்ம நாகை கூட்டத்தின் 3வது நிகழ்வாக “இன்று ஒரு புத்தகம் நாளை ஒரு வாசகர்” என்ற தலைப்பில் புத்தக நன்கொடை இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், இன்று(24.08.2026) தொடங்கிவைத்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் “நம்ம நாகை கூட்டம்” 3-வது நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் “புத்தகம் வழங்கும் இயக்கம்” 24.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறுகிறது.
இத்தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
“நாம் வாசித்து முடித்த ஒரு புத்தகம், வேறு ஒருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய சிந்தனையையும், புதிய வழிகாட்டுதலையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே, நம்மிடம் வாசித்து முடித்த நிலையில் இருக்கும் நல்ல புத்தகங்களை வீணாக வைத்திருக்காமல், அவற்றை மற்றவர்களும் வாசிக்க வழங்குவது மிகவும் பயனுள்ள சமூகப் பணியாகும்.
இந்த புத்தக நன்கொடை இயக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கான கதைகள், படக்கதைகள், காமிக்ஸ், சிறுவர் நூல்கள், மாணவர்களுக்கான அறிவியல், பொது அறிவு, அகராதி போன்ற புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், பெரியவர்களுக்கான தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், நாவல்கள், கவிதை நூல்கள், இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு வழிகாட்டி நூல்கள், வாழ்க்கை வரலாறு, சுயசரிதை மற்றும் கல்வி சார்ந்த இதழ்கள் ஆகியவற்றையும் வழங்கலாம்.
சேகரிக்கப்படும் புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சமூக நூலகங்கள், இளைஞர் மன்றங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
புத்தகங்களை வழங்க ஏதுவாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்திலும் மேலும், ஆகஸ்ட் 24-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம், 25-ஆம் தேதி வேளாங்கண்ணி, 26-ஆம் தேதி பழைய பேருந்து நிலையம், 27-ஆம் தேதி நாகூர் பேருந்து நிலையம், 28-ஆம் தேதி ஆயக்காரன்புலம் கடைத்தெரு, 29-ஆம் தேதி திருமருகல் மற்றும் 30-ஆம் தேதி புதிய கடற்கரை ஆகிய இடங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன மின்னணு திரை வாகனத்தில் மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்கள் புத்தகங்களை வழங்கலாம்.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வாசித்து முடித்த நிலையில் உள்ள நல்ல புத்தகங்களை வழங்கி, இந்தப் புத்தக நன்கொடை இயக்கத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பழைய புத்தகங்கள் மட்டுமல்ல புதிய புத்தகங்களையும் வழங்கி, புதிய வாசகர்களை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் அனைவரும் இம்முயற்சியில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கண்ணன் கருப்பையா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.அரங்கநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.