நாகப்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நகர திமுக அலுவலகத்தில் நடந்தது. நகர அவைத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட பொருளாளர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதி ரமணி, நகர துணை செயலாளர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கவுதமன் பேசியதாவது: தமிழகத்தில் தேர்தலின் போது தமிழக வெற்றிக்கழகம் வாக்குறுதிகளை அள்ளி விட்டது. அதில் ஒன்றை கூட இன்று நிறைவேற்றவில்லை. தமிழக மக்களிடம் பொய் சொல்லி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி நடத்திக்கொண்டு இரு’கிறது. தேர்தலின்போது 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தற்போது 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், அதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இருக்க வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளது. இதனால் யாருக்கும் இலவச சிலிண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளையும், திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்க முடியில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான் தற்போது விரிவுப்படுத்தி அறிவித்து வருகிறார்கள். எப்போதே திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியைபோல்தான் செயல்படும். ஆனால் ரீல்ஸ் போடுவதிலும், பாட்டுப்பாடுவதிலும்தான் தமிழக வெற்றிக்கழக ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். 100 நாள் ஆட்சியில் ஒரு திட்டத்தையும் முழுமையாக செல்படுத்தவில்லை. மக்கள் சொல்லெண்ண துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தையும், தமிழக மக்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற ஒருநபரால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும் தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றிகளை விட அதிக அளவில் நடப்பாண்டு உள்ளாட்சி தேர்தலில் பெற வேண்டும். இதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். நகர பொருளாளர் அபுபக்கர்,வர்த்தக அணி அமைப்பளார் குலோத்துங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் சிவா நன்றி கூறினார்.