நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையில் உள்ள அவ்வை கிராம நலச் சங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அடல் வயோ அபியுதாய் யோஜனா திட்டம் குறித்து சமூக அமைப்புகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.08.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர்ஃசெயலாளர் மாண்புமிகு நீதிபதி திருமதி.பி.சுப்புலெட்சுமி அவர்கள் உள்ளார்.
சமூக அமைப்புகளுக்கான மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அடல் வயோ அபியுதாய் யோஜனா (யுவயட ஏயலழ யுடிhலரனயல லுழதயயெ – யுஏலுயுலு) திட்டம் மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகள் தொடர்பான சட்ட விதிகள் குறித்து சமூக அமைப்புகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
அடல் வயோ அபியுதாய் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் முதியோர் இல்லங்கள், சுகாதார வசதிகள், திறன் மேம்பாடு, தேவையான உதவி மற்றும் ஆதரவு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007 மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் தொடர்பாகவும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இச்சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது.
இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைந்து விசாரித்து தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர், பராமரிப்பு அலுவலராகவும், சமரச அலுவலராகவும் செயல்பட்டு வருகிறார். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளால் பாதிக்கப்படும் நபர்களுக்காக மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ், வயதான பெற்றோர் மற்றும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது பிள்ளைகள், மகன், மகள், பேரன், பேத்தி உள்ளிட்ட சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பராமரிப்புத் தொகை தொடர்பான கோரிக்கைகளை தீர்ப்பாயம் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்.
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி பராமரிப்புத் தொகையை செலுத்தத் தவறினால், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்ப்பாயத்தால் உத்தரவு வழங்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் திருப்தியில்லாத மூத்த குடிமக்கள், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரம்பிற்குள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக செயல்படுகிறார். சட்ட விதிகளின்படி பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு தானம் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் மூலம் வழங்கும்போது, பிற்காலத்தில் அவர்களை முறையாக பராமரிக்கத் தவறினால், அந்தப் பத்திரத்தை ரத்து செய்யும் வகையிலான சட்டப்பூர்வ நிபந்தனை இடம்பெற வேண்டும் என்பதும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான புகார்களை உரிய வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்து, சட்ட விதிகளின்படி நடவடிக்கை கோரலாம்.
மேலும், மூத்த குடிமக்கள் நலனில் குடும்பமும் சமூகமும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதில் சட்ட நடவடிக்கைகளுடன், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது, மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் போன்ற சட்டங்கள், அவர்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், சட்டத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படுவதற்கு முன்பே குடும்பத்திலும் சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிரச்சினைகளைத் தடுப்பதே மிகவும் சிறந்த அணுகுமுறையாகும்.
ஒரு சட்டத்தை ஆயிரத்தில் ஒருவரோ, இருவரோ பயன்படுத்தும் நிலை இருந்தால் அது சட்டத்தின் தேவை என்பதை காட்டுகிறது. ஆனால், அதே சட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், சமூகத்தில் குடும்ப உறவுகள் தொடர்பாக முக்கியமான பிரச்சினை உருவாகியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
எனவே, மூத்த குடிமக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதியோர் இல்லங்களில் மட்டும் நடத்தப்படாமல், சமூகத்தின் முக்கிய பங்குதாரர்களை சென்றடையும் வகையில் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளம் தலைமுறையினர், புதிதாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணையும் தம்பதியினர், பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.
குடும்ப உறவுகளில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, பொறுமையுடன் நடந்து கொள்வது, பெரியவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது, அவர்களின் அனுபவத்தை மதிப்பது போன்ற பண்புகள் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்களது பெற்றோர்களை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதைப் பார்த்து வளரும் குழந்தைகளும் அதே பண்புகளை தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.
இன்றைய சூழலில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வது, குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்து வருகிறது. இந்நிலையில், குடும்பத்தில் மூத்த குடிமக்களின் அனுபவமும் வழிகாட்டுதலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் அனுபவத்தை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கும் சில விஷயங்களில் பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம். வயது முதிர்ந்த காலத்தில் குழந்தைகளைப் போன்ற மனநிலையும், அதிக அக்கறை மற்றும் கவனம் தேவைப்படும் உணர்வும் சிலரிடம் ஏற்படலாம். இதனை குடும்ப உறுப்பினர்கள் புரிந்துகொண்டு, அவர்களிடம் அன்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என இரு தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். சமூக அமைப்புகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, இரு தரப்பினரின் கருத்துகளையும் புரிந்துகொண்டு, குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
முதியோர் இல்லங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பையும் பராமரிப்பையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், குடும்பத்தினர் அனைவரும் நல்ல நிலையில் இருக்கும்போது, குடும்ப உறவுகளைப் பேணி, மூத்த குடிமக்களை தங்களுடன் வைத்து அன்புடனும், பாதுகாப்புடனும் கவனித்துக் கொள்வதே சிறந்ததாகும்.
சமூக அமைப்புகள் தங்களது பகுதிகளில் மூத்த குடிமக்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களையும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மூத்த குடிமக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து துணை நிற்கும்.
மூத்த குடிமக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி குடும்பம், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு திரு.கே.கே பாலச்சந்திரர், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி கி.திவ்யபிரபா., வழக்கறிஞர் திருமதி ரெஜினாமேரி, வளநபர் டாக்டர் விக்னேஷ் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட பாதுகாப்பு அலுவலர் திருமதி.ரமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : விஜய்
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்தநாளை முன்னிட்டு
சாதிப்பாசத்தால் வரும் சாப்பாடும் வேலை செய்யாமல் வரும் அரசு சம்பளமும்....