நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கிய போது வேளாண் இணை இயக்குனர் பாபு கடந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பயிர் சாகுபடி உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து பேச தொடங்கினார். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விவசாயிகள் எழுந்து நாகை மாவட்டத்தில் கடந்த 2024-25-ம் ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைக்க வந்தோம். ஆனால் கலெக்டர் கூட்டத்தில் பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும் பெயரளவுக்கு நடத்துவதற்கு, கூட்டத்தை நடத்தவே வேண்டாம் என்று கூறி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி ஒத்தி வைத்தார்.
அப்போது ஒரு தரப்பு விவசாயிகள் தனபால், பிரகாஷ் உள்ளிட்டோர் 2 மாதங்களுக்கு பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கிறது. அதனை தெரிவிக்க வேண்டும். எனவே கூட்டத்தை ஒத்தி வைக்காமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் இருதரப்பு விவசாயிகளுக்கும், இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை நடத்தக்கூடாது என்று ஒரு பிரிவு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. கலெக்டர் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.