திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் காவலர்களுக்கு பாராட்டு
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பில்லாபாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (32), (லாரி ஓட்டுநர்) த.பெ. செல்லையா என்பவர் மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரவிக்குமார் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி, முருகன் கோவில் தெருவில் தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டு, அங்கேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தந்தையை பார்ப்பதற்காக ரவிக்குமார் கடந்த 03.05.2021 அன்று தனது சொந்த ஊரான பில்லாபாளையம் கிராமத்திற்கு வந்திருந்த போது, அவரது சகோதர்களான சிவக்குமார் , (லாரி கிளினர்), ராஜசேகரன் , (லாரி பட்டறை தொழில்) நடுத்தெரு, அமராவதி சாலை, பிள்ளப்பாளையம், முசிறி வட்டம் என்பவர்கள் இறந்துபோன ஆட்டை சமைப்பதற்காக கொண்டு வந்திருந்ததாகவும், அதற்கு ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த ராஜசேகரனின் தூண்டுதலின் பேரில் சிவக்குமார் என்பவர் கத்தியால் ரவிக்குமாரின் இடது பக்க இடுப்புப்பகுதியில் பலமாக குத்தியதாகவும், இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
எனவே, இறந்து போனவரின் அத்தை ராஜேஸ்வரி என்பவர் மேற்படி எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரை பெற்று தா.பேட்டை காவல் நிலைய குற்ற எண். 97/21, U/s 114, 302 IPC ன் படி 03.05.2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு 04.05.2021 அன்று எதிரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (II-ADJ) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பிரமணியன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (03.01.2026) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், (II- ADJ) எதிரி -1 சிவக்குமார் , என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 1,000 அபராதம் வழங்கியும், ராஜசேகரன் விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த தா.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் ராதா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.